Archives: மே 2023

சிறியது ஆனால் சிறந்தது

“நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா?” கல்லூரியின் ஒரு நீச்சல் வீராங்கனை அவளின் வேகம் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலைப்பட்டாள். ஆனால் கணிதப் பேராசிரியர் கென் ஓனோ அவளது நீச்சல் நுட்பங்களை ஆராய்ந்தபோது, அவளுடைய நேரத்தை ஆறு வினாடிகளுக்குள் எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தார். அதுவே போட்டியில்  அவளுடைய வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும். நீச்சல் வீராங்கனையின் முதுகில் சென்சார்களை இணைத்து, அவரது நேரத்தை மேம்படுத்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, ஓனோ, சிறுசிறு காரியங்களை சரிசெய்ய முயற்சித்தார். நீரினுள் அவற்றை சரியாய் கடைபிடித்தால் வெற்றிக்கு ஏதுவான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தீர்மானித்தார். 

ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறிய காரியங்களை சரிசெய்யும்போது, அது பெரிய மாற்றத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும். சிறையிருப்பிற்கு பின்னர், செரூபாபேலோடு சேர்ந்து ஆலயக் கட்டுமான்ப பணியில் ஈடுபட்ட மீதியான இஸ்ரவேல் ஜனத்திற்கு சகரியா தீர்க்கதரிசியும் அதேபோன்ற ஒரு ஆலோசனையையே கொடுக்கிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சேனைகளின் கர்த்தர் செரூபாபேலுக்குச் சொல்லுகிறார் (சகரியா 4:6).

“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (வச. 10) என்று சகரியா கேட்கிறார். தாங்கள் கட்டப்போகிற ஆலயம் சாலெமோனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு நிகராகாது என்று இஸ்ரவேலர்கள் சோர்ந்துபோயிருக்கின்றனர். ஆனால் தன்னிலிருக்கும் சிறு சிறு காரியங்களை மாற்றிக்கொண்டு ஓனோவின் நீச்சல் வீராங்கனை எவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றாளோ, அதுபோல தேவனோடு கூடிய சின்னஞ்சிறு முயற்சிகள் கூட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடும் என்பதை செரூபாபேலின் கூட்டம் விசுவாசித்தது. தேவனில் சிறியதும் சிறந்ததாய் மாறக்கூடும்.

இயேசுவே பதில்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் போதனையை நன்கு செவிகொடுத்து கேட்ட அவரது ஓட்டுநர், அவர் பேசிய அனைத்தையும் நன்கு கேட்டுவிட்டு, அவரே சொற்பொழிவாற்றுவதற்கு போதுமான தகவல் இருப்பதாக அறிவித்தார். அப்போது ஐன்ஸ்டீன், அடுத்த கல்லூரியில் சொற்பொழிவாற்றும்போது, அவர்கள் என்னை நேரில் கண்டதில்லை என்பதினால் நாம் இருவரும் ஆள்மாறாட்டம் செய்து உரையாற்றுவோம் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதில் கேள்வி-பதில் நேரம் வந்தது. அதில் மிகவும் ஆக்ரோஷமான ஒரு கேள்விக்கு, ஓட்டுநர் அந்த நபரைப் பார்த்து, “நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை நான் பார்க்கிறேன், ஆனால் என் ஓட்டுநர் கூட பதிலளிக்கக்கூடிய ஒரு எளிய கேள்வியை நீங்கள் கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று சொல்ல, ஓட்டுநர் வேடத்தில் இருந்த ஐன்ஸ்டீன் அந்த கேள்விக்கு பதிலளித்தாராம். வேடிக்கையான ஆனால் கற்பனையான கதை இங்கே முடிகிறது.

தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மிகவும் இக்கட்டான தருணத்தில் சிக்கிக்கொள்கின்றனர். தான் உருவாக்கின பொற்சிலையை அவர்கள் வணங்காவிட்டால், அவர்களை அக்கினி சூளையில் போடுவதாக நேபுகாத்நேச்சார் பயமுறுத்தினான். “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” (தானியேல் 3:15) என்று கேட்கிறான். தானியேலின் நண்பர்கள் பணிந்துகொள்ள மறுத்ததினால், ஏழு மடங்கு சூடேற்றப்பட்ட அக்கினி சூளையில் அவர்களை தூக்கிப்போட்டான். 

அவர்கள் தனியே செல்லவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஒரு தூதனாக அவர்களோடு அக்கினியில் உலாவி, அவர்கள் சேதமடையாமல் காத்து, ராஜாவின் கேள்விக்கு மறுக்கமுடியாத வகையில் பதிலளித்தார் (வச. 24-25). அப்போது நேபுகாத்நேச்சார், “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே” என்று தேவனை துதித்து, “இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்” (வச. 28-29). 

சில சமயங்களில், சூழ்நிலை நம் கைமீறிப் போவதாக நாம் உணரலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் துணை நிற்கிறார். அவர் நம்மை சுமந்துசெல்வார். 

அனைத்தும் இயேசுவுக்காக

ஜெஃப் பதினான்கு வயதாக இருந்தபோது, அவரது அம்மா அவனை ஒரு பிரபல பாடகரை பார்க்க அழைத்துச் சென்றார். அவருடைய காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற பாடகர்களைப்போலவே, அமெரிக்க பாப் மற்றும் நாட்டுப்புற பாடகரான பி.ஜே. தாமஸ், இசைக்காக சுற்றித் திரியும்போது தன்னையே அழித்துக்கொள்ளும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தார். அந்த வாழ்க்கை முறை, அவரும் அவருடைய மனைவியும் இயேசுவை அறிவதற்கு முன்பாக இருந்தது. அவர்கள் கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாறியபோது அவர்களின் வாழ்க்கை தீவிரமாக மாறியது.

அந்த இரவு இசை நிகழ்ச்சியின்போது, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை தன்னுடைய பாடல் திறமையின் மூலம் ஈர்க்க முற்பட்டார். அவருக்கு தெரிந்த சில பரீட்சயமான பாடல்களை பாடிய பின்பு, கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் “இயேசுவின் பாடல் ஒன்று பாடு” என்று கேட்க, அவர் எந்தவித தயக்கமுமின்றி, “நான் நான்கு பாடல்களையும் கிறிஸ்துவுக்காகத் தான் பாடினேன்” என்று சொன்னாராம். 

அவருடைய பழைய வாழ்க்கை மாற்றப்பட்டு சில தசாப்தங்கள் கடந்துவிட்டன. எனினும், நாம் செய்யும் அனைத்தும் இயேசுவுக்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அந்த தருணத்தை ஜெஃப் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். மத சம்பந்தப்படாத விஷயங்களைக் கூட இயேசுவுக்காக செய்யவேண்டும் என்று அவர் கருதுகிறார். 

சில சமயங்களில் நாம் வாழ்க்கையில் செய்யும் காரியங்களைப் பிரித்து புரிந்துகொள்ளுகிறோம். வேதாகமத்தைக் படியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு பாடலைப் பாடுங்கள். புனிதமான பொருட்களை சேகரியுங்கள். புற்களை வெட்டுங்கள். ஓட்ட பயிற்சி செய்யுங்கள். நாட்டுப்புறப் பாடலைப் பாடுங்கள். இவைகள் மதச்சார்பற்ற விஷயங்கள்.

கொலோசெயர் 3:16இல் போதித்தல், பாடல் பாடுதல், நன்றியுள்ளவர்களாயிருத்தல் போன்ற செய்கைகளில் தேவன் வாசம்பண்ணுகிறார் என்று பார்க்கிறோம். ஆனால் 17ஆம் வசனத்தில், “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்(யுங்கள்)” (கொலோசெயர் 3:17) என்று தேவனுடைய பிள்ளைகளுக்கு வலியுறுத்துகிறார். 

நாம் அனைத்தையும் அவருக்காகவே செய்கிறோம்.

ஆசீர்வதிக்கப்பட்ட வழக்கம்

காலையில் ரயிலில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து, திங்கட்கிழமை பரபரப்பை உணர்ந்தேன். நெரிசல் நிறைந்த கேபினில் இருந்தவர்களின் தூக்கம், எரிச்சலான முகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் வேலைக்கு செல்லும் சரியான மனநிலையில் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும். சிலர் உட்காரும் இருக்கையை பிடிக்க முண்டியடித்து முன்னேற, மேலும் பலர் உள்ளே நுழைய முற்பட்டதால் முகச் சுளிவுகள் வெடித்தன. இதோ வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சாதாரண நாளாக இதுவும் நகர்ந்து செல்லுகிறது. 

திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு, கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் நம்முடைய அன்றாட வழக்கத்தை செயல்படுத்த முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். உணவு உண்பதற்கு வெளியே செல்லமுடியாத நிலை. சிலர் அலுவலகங்களுக்கும் செல்லமுடியவில்லை. ஆனால் தற்போது நாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறோம். வழக்கம்போல செய்யும் இயல்பு காரியங்கள் சலிப்பு தட்டகூடியதாய் இருந்தாலும் அது ஆசீர்வாதம் என்னும் நற்செய்தியை நான் உணர்ந்தேன். 

சாலொமோன் ராஜா, நாம் அன்றாடம் ஏறெடுக்கும் பிரயாசங்களில் இருக்கும் அர்த்தமற்ற காரியங்களைக் குறித்து பேசுகிறார் (பிரசங்கி 2:17-23). சிலவேளைகளில் அது முடிவில்லாததாகவும், அர்த்தமற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் தெரியலாம் (வச. 21). ஆனாலும் புசித்து குடித்து ஒவ்வொரு நாளும் திருப்தியாய் இருப்பது தேவனிடத்திலிருந்து கிடைத்த நன்மை என்பதை அவர் வலியுறுத்துகிறார் (வச. 24). 

நாம் வழக்கமாய் செய்யும் காரியங்களினால் சலிப்படையும்போது, இந்த காரியங்கள் அனைத்தும் மேன்மையானது என்பதை அறிவோம். நாம் புசித்து, குடித்து, கையிட்டு செய்யும் பிரயாசங்களில் திருப்தியடைவது என்பது தேவன் நமக்கருளிய ஈவு என்று எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துவோம் (3:13).

கனவல்ல

அது நீங்கள் எழுந்திருக்க முடியாத கனவில் வாழ்வது போன்றது. சில சமயங்களில் “உணர்ச்சியற்று தனிமையாயிருத்தல்” அல்லது “தனிமையாக்கப்படுதல்” என்ற சூழ்நிலைக்குள் கடந்துசெல்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ள எதுவும் உண்மையில்லை என்று நினைக்கிறார்கள். நீண்டகாலமாக இந்த உணர்வைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கோளாறு இருப்பதைக் கண்டறிய முடியும் என்றாலும், மனஅழுத்தம் நிறைந்த காலங்களில் இது ஒரு பொதுவான மனநலப் போராட்டம் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை நன்றாக இருந்தாலும்கூட இதுபோன்ற உணர்வுகள் சிலவேளைகளில் நம்மை அழுத்தும். நமக்கு நல்ல காரியங்கள் நடப்பதே இல்லை என்று நம்முடைய சிந்தை நம்ப ஆரம்பித்துவிடுகிறது. 

தேவ ஜனம், சில சமயங்களில் அவருடைய வல்லமையையும் விடுதலையையும் அனுபவிப்பதற்காக நடத்தும் இதேபோன்ற போராட்டத்தை ஒரு கனவாக அல்ல, உண்மை என்றே வேதம் அறிவிக்கிறது. அப்போஸ்தலர் 12ல், ஒரு தேவதூதன் பேதுருவை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கும்போது (வச. 2,4), என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்போஸ்தலர் மயக்கத்தில் இருந்ததாக அறிவிக்கப்படுகிறது (வச. 9-10). தேவதூதன் அவரை சிறைக்கு வெளியே விட்டுச் சென்றபோது, பேதுருவுக்கு தெளிவு வந்தது (வச. 11) என்று வேதம் அறிவிக்கிறது. பின், சம்பவித்தவைகள் எல்லாம் உண்மை என்பதை பேதுரு அறிகிறான். 

நல்லதோ கெட்டதோ, நம்முடைய வாழக்;கையில் சம்பவிக்கும் காரியங்களில் தேவன் முற்றிலும் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றலாம். ஆகிலும் அவரை விசுவாசிக்கும்போது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையானது ஆச்சரியமான விதங்களில் கிரியை செய்யும் என்பதை மறுக்கமுடியாது. தேவனுடைய வெளிச்சமானது நம்முடைய நித்திரையிலிருந்து நம்மை விழிக்கச் செய்து அனைத்தையும் நிஜமாய் நம் கண்முன் கொண்டுவருகிறது (எபேசியர் 5:14).